பசுமை நிறைந்த நினைவுகளே..


இந்த பாட்ட கேட்டதும் (ஃபேர்வல்), அதாங்க பள்ளிக்கூட, கல்லூரி பிரிவு உபச்சார விழாதான் நம்ம ஞாபகத்துக்கு வரும். இப்படி பல பாடல்கள் சில நிகழ்ச்சிக்காகவே நம்ம ஆட்கள் வச்சிருப்பாய்ங்க நம்ம மக்கள். எடுத்துக்காட்டா 'வாராயோ தோழி வாராயோ - கல்யாணம், இளமை இதோ - புத்தாண்டு'..எங்க ஊர்ல இருக்கிற பெண்களுக்கான கல்லூரிகள் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டா, மதுரை மக்கள்கிட்ட கேளுங்க - சிறந்ததா எங்க கல்லூரியைதான் தேர்வு செய்வாங்க! அத்தனை பிரசித்தி.


நான் பி.எஸ்ஸி படிக்கும்போது,ஒரு செட் சேர்ந்தோம் பாருங்க, சும்மா லெக்சரர் எல்லாம் நடுங்குவாங்க எங்க வகுப்புக்கு வரதுக்கே, அவ்வளவு அடக்கம்! கடைசி பென்ச்! சேட்டை எல்லாம் செய்யரதுக்குன்னே வந்திருக்கீங்களான்னு கேப்பாங்க எல்லாரும். HODயை வாரம் ஒருமுறை சந்திச்சிரனும் எங்களுக்கெல்லாம்! மொத்தம் 10 பேர். இம்சை தாங்காம ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு பெஞ்சில உக்கார சொல்வாங்கன்னா பார்த்துக்கோங்களேன்.லேடீஸ் காலேஜில படிச்சா நிறைய இம்சை பொண்ணுங்களுக்கு கிடையாது. அம்மா அப்பா ரொம்ப ரிலாக்ஸா இருப்பாங்க - நொய் நொய்னு பசங்க பத்தி அட்வைஸ், வார்னிங் எல்லாம் சொல்ல சந்தர்ப்பம் இருக்காது. ஏன்னா எங்களுக்கு போக வர காலேஜ் பஸ், மத்த படி காலேஜுக்குள்ள பசங்க நுழைய முடியாது. தங்கச்சிய இறக்கிவிட வந்தேன், கூட்டிட்டு போக வந்தேன்னு கூட உள்ள வர முடியாது! ஒரு அட்டண்டர், ரெண்டு வாட்ச்மேன், 2 பஸ் டிரைவர் அவ்வளவுதான் எங்க கல்லூரி தேசத்துல ஆண்கள் ஆதிக்கம்!


வருஷா வருஷம் ஃபீஸ் கட்டவேண்டிய நாள், எக்ஸாம் ஃபீஸ் எல்லாத்தையும் கடைசி நாள் அன்னைக்கு தான் கட்டுவோம், இல்லைன்னா, கட்டாதவங்களுக்கு ஒரு க்ரேஸ் நாள் தருவாங்களே அப்போ தான் கட்டுவோம், ஏன்னு கேட்டீங்கன்னா, வீட்ல எல்லாம் ஃபீஸ் கட்டனும்னு சொன்ன உடனே, வசூலிச்சிருவோம், அதை செலவழிச்சிட்டு கடைசி நாளுக்குள்ள தேத்தனும்ல, அதுக்கு தான் இவ்வளவு கஷ்டமும்!!


எக்ஸாம்னாலே ரொம்ப கொண்டாட்டம்தான் எங்க மக்களுக்கு. க்ருப் ஸ்டடிங்கிற பேர்ல யார் வீட்லயாவது ஸ்டடி லீவ் எல்லாம் கழிச்சிட்டு முந்தின நாள் தான் தனியா படிப்போம். டீ எல்லாம் ஃப்ளாஸ்கில நிரப்பிட்டு பெட்ரூமுக்கு எடுத்திட்டு போய், முதல் கப் குடிச்சு முடிச்சிட்டு, ஒரு மணி நேரம் மட்டும் தூங்குவோம்னு அலாரம் எல்லாம் வச்சிட்டு, தூங்கிருவோம். அப்புறம் அலாரம் அடிச்சுதா, எந்திருச்சியான்னு எல்லாம் கேட்கக் கூடாது! காலைல 6 மணிக்கு எந்திருச்சு, அம்மாக்கிட்ட நாந்தான் தூங்கிட்டேன்னா, நீங்களாவது எழுப்பியிருக்க கூடாதான்னு சொல்றது,அம்மா திரும்ப ஒரு முறை கொடுப்பாங்க பாருங்க, சூப்பரா இருக்கும், அப்படியே வேகம் வேகமா, குழிச்சிட்டு, காலேஜ் போயிருவேன்.


அங்க நம்ம மொத்த செட்டும் இருக்கும் பாருங்க - சும்மா சூப்பரா இருக்கும்!! நீ என்ன பாடம் படிச்ச, அதை கொஞ்சம் சொல்லுடின்னு ஒருத்தர் ஒருத்தர்கிட்ட போய் கேட்டு 10 மணிக்குள்ள நல்லா தேத்திருவோம். என்ன சொல்லுங்க நாமளா படிக்கறத விட இப்படி செவி-வழி கல்வி நல்லா மனசில தங்கும்! தியரி பேப்பர் எல்லாம் இந்த கதை தான். ப்ரோக்ராமிங் எல்லாம் பிரிச்சு மேஞ்சிருவோம்ல! 10 பேர்ல ஒரு 5 பேராவது டாப் 5ல இருப்போம்.


மத்தியானம் பரீட்சைன்னா, காலைலதான் ஆரம்பிப்போம் படிக்க! கடைசில 10 பெரும் அரியர்ஸே வைக்காம பாஸ் பண்ணிட்டோம்ல! எப்படி!! இதுல 4,5 பேர் ரேங்க் ஹோல்டர்ஸ் வேற!! இந்த லவ் பண்ற பொண்ணுங்களை தான் ஓரங்கட்டி கிண்டல் பண்ணுவோம். ரோஸ் வச்சிட்டு காலேஜ் வந்தா ஒரு கிண்டல், சேலை கட்டிட்டு வந்தா ஒரு கிண்டல், புது ஹேண்ட் பேக் கொண்டுவந்தா ஒரு கிண்டல்னு ஓட்டிவோம்!


இந்த ஃபைனல் இயர் அழகான காலம். மிக சீக்கிரம் முடிஞ்சா மாதிரி இருக்கும். செட் சாரி (சேலை) ன்னு ஒரு பழக்கம் இருக்கும் எல்லா லேடீஸ் காலேஜ்லயும். அதாவது செட்ல இருக்கிற அத்தனை பேரும், ஒரே மாதிரி, ஒரே கலர்ல சேலை கட்டி, ஃபோட்டோ எல்லாம் எடுத்து ஞாபகார்த்தமா வச்சுக்குவாங்க! அனேகமா அந்த சேலையை அன்னைக்கு மட்டும் தான் எல்லாரும் கட்டுவாங்க, அதுக்கு அப்புறம் அது பீரோவில தூங்கும்.


எங்க செட் மட்டும் இதை செய்யல. அப்படி கட்டுற மக்களை எல்லாம் எக்கச்சக்கமா கிண்டல் பண்ணி ஏண்டா கட்டினோம்னு ஃபீல் பண்ணவச்சிருவோம். திட்டி தீர்த்திருவாள்க எங்கள! அதுக்கும் வெட்கமில்லாமல் சிரிப்போம்னா பார்த்துகோங்க! லெக்சரர் திட்டினாலும் இதே ரியாக்ஷன் தான் குடுப்போம், கடுப்பாயிருவாங்க.


ஃபேர்வல் அன்னைக்கு எல்லாரும் ஆட்டோகிராப் கேட்பாங்க எழுதுவாங்க. நாங்க யாரு ! எல்லாருக்கும் எல்லாம் எழுத மாட்டோம்ல , ரொம்ப முக்கியமானவங்களுக்கு மட்டும் எழுதுவோம். அப்ப பார்த்து அழுவாய்ங்க சில பேர், "இனி எப்போடி பார்ப்போம்", "போன் பேசு என்ன","லெட்டர் போடுபா" இப்படி எல்லாம் சொல்லி பெனாத்துவாய்ங்க! ஒரே காமெடியா இருக்கும். நாங்க கெக்க பெக்கேன்னு சிரிப்போம் அப்ப, அத பார்த்திட்டு அவங்க தன்னால நொந்துருவாய்ங்க! இன்னைக்கும் இவிங்க திருந்தலையான்னு நினைச்சு தனக்கு தானே திட்டிக்குவாங்க!


நாங்க படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் காலேஜ் போனப்போ, எங்க ஜூனியர்கள் கிட்ட எங்களை திட்டின, பல முறை வார்ன் பண்ண ஹெச்ஓடி, லெக்சரர்ஸ் எல்லாரும் "இவங்க உங்க சீனியர்ஸ், நல்ல பிள்ளைகள், அருமையா படிப்பாங்கன்னு" சொல்லும்போது நம்ம சேட்டையை கொஞ்சம் குறைச்சு பண்ணியிருக்கலாமோன்னும் தோன்றியது!!

காதலர் தினம்இந்த உலகம் கொண்ட பொக்கிஷமெல்லாம்
உலகின் முதல் பணக்காரர் கொண்ட பணமெல்லாம்
எழில் கொஞ்சும் மங்கையரின் அழகெல்லாம்
மழலை தரும் மகிழ்ச்சி எல்லாம்
அள்ளி என்னிடம் தந்தாலும் அதற்கு மாறாக,

அந்த முதல் வார்த்தைகள்
நாம் இருவரின் பெயர்களால் நிறைந்த பக்கங்கள்
அருகில் நிற்காமல் சேர்ந்தெடுத்த புகைபடங்கள்
நாம் பரிமாறிக் கொண்ட சின்ன சின்ன பரிசுகள்
பழகிய அந்த அழகான பொழுதுகள்
மனதில் தோன்றிய கவிதைகள்
நமக்காகவே உலகம் இயங்கிய அந்த நிமிஷங்கள்
கடைசியாக நாம் அழுத கண்ணீர் துளிகள்
இதில் எதையுமே நான் தரமாட்டேன்..

ஏதோ சொல்கிறார்கள் ஆன்றோர் சான்றோர்
துன்பம் என்பது, தன்னுடையது என்று ஒரு பொருளை
நாம் எண்ணும் போதுதான் வரும் .. ஈடுபாடு இல்லை
எனக்கிந்த கூற்றின்மேல் உன்னை என்னுடையவன்
என்று எண்ணியபின்தான் எனக்கு,
சந்தோஷம் - இவ்வார்த்தையின் அர்த்தம் விளங்கிற்று..


இப்பொழுது நீ இல்லை,
ஆனால் எனக்குள் இன்னும் உன் முகம்,
அந்த சிரிப்பு, கர்வம் கலந்த அந்த பார்வை
நான்கு விரல் கொண்டு நீ அழகாக கோதிவிடும் உன் முடி
கவிதை எழுதும் போது உன் முகத்தில் தோன்றும் அந்த சிந்தனை....
சொல்வேன் இன்னும் ஏராளம் உன்னைப் பற்றி
ஒரு முப்பது ஆண்டுகள் கழித்து என்னிடம் வந்து கேட்டுப்பார்
இதையே சொல்வேன், நம் காதல் அத்தனை வலிமையானது!


சரி இன்று ஏன் உன்னை அதிகமாக நினைவு கூர்ந்தேன்?
ஆங்... காதலர் தினம் ..
இந்நாளை போற்றுவதில் உனக்கு உடன்பாடு கிடையாது,
தினமும் காதலர் தினம்தானடி நமக்கு என்பாய்...
உன்னுடைய ஒரு பழக்கம் - உன்னிடம் சொல்லாமலேயே
நான் ரசித்த ஒரு பழக்கம்
நீ இல்லாத போதும் உன் கருத்தை
நினைவில் வைத்து, அப்படியே நடந்தால்
உனக்கு மிகவும் பிடிக்கும், பெறுமை கொள்வாய்

நீ இல்லாத இன்று, உன் சொல்படியே கேட்கிறேன்
வேண்டாம் எனக்கும் இந்த காதலர் தினம்,
எனக்கு நீ, நம் காதல் மட்டும் போதும்..

மறுமுறை சொல்கிறேன்
வேண்டாம் எனக்கு இந்த காதலர் தினம்,
எனக்கு நீ, நம் காதல் மட்டும் போதும்..
மீண்டும் உயிர் பெற்று வருவாயா,
என்மேல் காதல் கொள்வாயா?

அதாவது நான் என்ன சொல்ல வர்ரேன்னா.... :)


மக்களே,
ஜனவரி 17-அன்னைக்கு போஸ்ட் போட்டதுக்கு பின்னால, ஆபீஸ்ல நாம ப்ளாக் எழுதறத மோப்பம் பிடிச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன், எக்கச்சக்க வேலை கொடுத்துட்டாங்க. இன்னும் இருக்கு பாக்கி! நிறைய பேர் வந்து என்ன ஆச்சு 'எஸ்' ஆயிட்டியான்னு கேட்கனும்னு நினைச்சு கொஞ்சம் டீஸண்டா, எப்போ அடுத்த போஸ்ட்டுன்னு கேட்டாங்க. நன்றி மக்களே, இந்த அன்புக்கு!
இந்த இடைப்பட்ட காலத்தில் நானும் வ.வ. சங்க மெம்பர் ஆகி 2 போஸ்ட் அங்க போட்டிருந்தேன், அவை இங்கும் இருந்தால் நல்லா இருக்கும்னு நினைச்சி, அடித்த ரெண்டு போஸ்டை போடறேன். படிச்சு 2 comment போட்டுட்டு போங்க!!