பாடல்களுடன் ஒரு பயணம்


ரொம்ப நாள் கழிச்சு காரில் ஒரு நெடும் பயணம் - மதுரையில் இருந்து பெங்களூர் வரை. 9 மணி நேரம் ஓட்டிறது ஒரு "ஹெர்கூலியன்" அனுபவமாக இருந்தது! பயணம் செய்யும் போது அலுப்பு தெரியவில்லை, வீட்டுக்கு வந்து படுக்கையில் சாய்ந்தபோதுதான் உடம்பு பட்ட பாடு தெரிந்தது! நடுவில் சேலத்தில் மட்டும் ஒரு காபி சாப்பிட நிறுத்தம், மற்றபடி ஒரே சீராக ஓட்டம்தான். நல்ல வெப்பம் மதுரையில், நல்ல வேளை மழை இல்லை. பயணத்தின் போது கேட்கும் பாடல்கள் நிச்சயம் நல்ல துணை, நேற்று இதை நான் உணர்ந்தேன்.


முதலில் லேட்டஸ்ட் என்ற பேர் கொண்ட ஒரு எம்.பி.3 சி.டி நிறைய பாடல்கள். கேட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும், அவ்வளவு இரசிக்கவில்லை. எனக்கு ஐபாட் என்றால் இஷ்டம்தான், ஆனால் என்னவோ ஹெட்ஃபோன் என்றால் ஒரு அலர்ஜி.அதனால் அமெரிக்கா சென்றபோது எனக்கென ஒன்று வாங்கவில்லை, தங்கைக்கு ஒன்று வாங்கினேன், அதில் அவள் பெயர் பதித்து! அலுவலகத்தில் மட்டும் பாடல் கேட்கத் தோன்றினால் எப்போதாவது கேட்பேன்.


எப்போதும் என் வீட்டில் பாடல்களை சி.டி. ப்ளேயரில் கேட்க பிடிக்கும், அதிக சத்தம் இல்லாமல் கேட்க பிடிக்கும், அதிலும் இரவில் பாட்டு கேட்டுக்கொண்டே தூங்க ரொம்ப பிடிக்கும். பாடல்களை நான் சந்தித்த சிலரோடு இணைத்து சிந்திப்பேன். அதேபோல் அந்த பாடலை முதலில் கேட்ட அந்த சூழல் கண்டிப்பாக என் மனதில் ஆழமாக பதிந்துவிடும். அதனால் பாடல்கள் கேட்கும்போது அந்த நினைவுகளை அசை போட்டுக்கொள்வது என் பழக்கம்! அழகன் படத்தில் வரும் ஒரு பாடல் (துடிக்கிறதே நெஞ்சம்.. அதைக் கேட்டால், உடனே ஜப்பனீஸ் கேக் வாசம் ஞாபகம் வரும்(மதுரை ராஜா பார்லி பேக்கரியில் செய்தது .. ஹூம்ம்ம் :) , முதல் முறை அந்த பாட்டு கேட்கும் போது என் அம்மா எனக்கு அந்த கேக்கும் இந்த பட கேசட்டும் வாங்கி தந்தார் - கேக்கை இரசித்துக்கொண்டே கேட்டேன் இந்த பாடலை!!)


இப்படி எனக்கு இஷ்டமான பாடல்கள் கேட்க பிடித்ததுபோல் சிலநேரம் இதுவரை கேட்காத பாடல்களையும் பரிசோதனை செய்வது நன்றாக இருக்கும். நேற்று அப்பாவின் ஒரு சி.டி, காரில் இருந்தது. அனைத்தும் பழைய பாடல்கள். சான்சே இல்ல, எப்படி இருக்கு பாடல் வரிகள். நான் எங்காவது ஒரிரு வரிகள் கேட்ட பாடல்கள் எல்லாம் முழுசாக கேட்டது நன்றாக இருந்தது, சில நான் இதுவரை கேட்டதே இல்லை.


அதில் இருந்த சில அருமையானவை:
1) உயர்ந்த மனிதன் - அந்த நாள்
"அவனவன் நெஞ்சினில் ஆயிரம் ஆசைகள்
அழுவதும் சிரிப்பதும் ஆசையில் விளைவுகள் ..." -- எத்தனை அழகான வரிகள்!!

2) ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு - கண்ணதாசனின் வரிகள்.. வார்த்தை இல்லை விளக்க, அத்தனை தெளிவு.

இந்த பாடல்களின் அழகே, இசையும், அவற்றை எழுதியோர், மற்றும் பாடியோரின் உழைப்பும்தான் என நினைக்கின்றேன். அவ்வளவு தெளிவான் உச்சரிப்பு, பாடல் வரிகளுக்கு உள்ளிருக்கும் அர்த்தம்தனை உண்ர்ந்து பாடுவது தெரிகிறது.


நல்ல பயணம், பசித்தால் புசிக்க நல்ல இசை - வேறென்ன வேண்டும் - இனிதே முடிந்தது அழகான ஒரு பயணம்.